கடந்த ஏப்ரல் மாதம் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமன்லோக் என்ற இடத்தில் நேற்று நள்ளிரவும் இருதரப்புக்கு இடையே மோதல் நடைபெற்றதாகக் தகவல் வெளியாகி உள்ளது. இதில், வீடுகளில் இருந்த பலர் உயிரிழந்திருப்பதாகவும் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. தப்பிக்கும் நோக்கில் வீட்டைவிட்டு வெளியே வந்தவர்கள் மீது ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை 9 பேர் உயிரிழந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கபட்டு உள்ளது. விடுமுறையில் சென்ற போலீசாருக்கு மீண்டும் பணியில் சேர அவசர அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு இனக் குழுக்கள் வசிக்கின்றனர். இதில் மலைப் பகுதிகளில் வசிக்கும், ’குக்கி’ என்ற பழங்குடியினத்தவருக்கும், பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் ’மெய்டீஸ்’ என்ற பழங்குடியினர் அல்லாதவர்களுக்கும் ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் எனக் கோரிவரும் மெய்டீஸ் சமூகத்தினருக்கு எதிராக குக்கி இனத்தவர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக எழுந்த மோதல் காரணமாக, கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி மணிப்பூரின் 8 மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் மணிப்பூர் மாநிலமே தீயில் கருகியது. பல கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன; பல உயிர்கள் காவு வாங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் சட்டவிரோதமாக ஆயுதங்களை எடுத்துச் சென்றவர்களிடம் இருந்து ஆயுதங்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.