சென்னையின் அடையாளமாக இருந்த டபுள் டக்கர் எனப்படும் மாடி பேருந்துகளின் சேவை, மாநகரில் அதிகரித்த போக்குவரத்து நெரிசல் காரணமாக கடந்த 2008ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டபுள் டக்கர் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படும் நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் சென்னை அண்ணாசாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் மாநகர போக்குவரத்து கழகத்தால் நேற்று தொடங்கியது.
குறைந்த செலவில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் இந்த பேருந்துகளை 50 கிமீ வேகத்திற்கு மேல் இயக்க கூடாது என்றும், நெரிசலான நேரங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகள் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் இந்த மாடி பேருந்துகளை இயக்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை தொடங்கப்பட்டால் சென்னையின் பழைய அடையாளம் புதியதாக உருவெடுக்கும்.