நடக்கவுள்ள 18வது மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 950 பேர் களம் காண உள்ளனர்.
17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது . தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் வேட்புமனு தாக்கல் 25-ம் தேதி தொடங்கியது. தற்போது நாடாளுமன்ற தேர்தலில் யார் யார் போட்டியிட உள்ளார்கள் என்ற விவரங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.
நடக்கவுள்ள 18வது மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 950 பேர் களம் காண உள்ளனர். இதில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 1085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 பேர் தங்களது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 59 வேட்பாளர்களும் குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் 9 பேரும் தமிழகத்தில் போட்டியிடுகின்றனர்.