50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் என்ற நிலை மாறி, சமீபகாலமாக 25 வயதினருக்கே மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதை விட மோசமான சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது.
குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்த துஷ்யந்த் என்ற 12 வயது சிறுவன், நேற்றைய தினம் அதிகாலை 5:30 மணியளவில் தனது வீட்டின் முற்றத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அச்சிறுவனது பெற்றோர், மருத்துவமனைக்கு கொடு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 12 வயது சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ள சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த தி.மு.க எம்.பி கனிமொழி, “இதுபோன்ற ஒரு சிறு குழந்தையின் இழப்பையும், மாரடைப்பால் சமீப காலமாக நாம் இழந்து கொண்டிருக்கும் பல இளம் உயிர்களையும் பற்றி அறிந்து கொள்வது மிகவும் கவலை அளிக்கிறது. நமது இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இதயச் சிக்கல்கள் மற்றும் கோவிட்-ன் நீண்டகால விளைவுகள் குறித்த ஆராய்ச்சிக்கு மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.