வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்து நிற்காமல் சென்றதால், தேர்வுக்காக காத்திருந்த 12-ம் வகுப்பு மாணவி அபாயகரமான முறையில் பேருந்தை நோக்கி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி நாளில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கவுள்ளன. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை பகுதியில், 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வுக்கு செல்வதற்காக, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.
வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லக்கூடிய அரசுப் பேருந்து, கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தேர்வுக்கு நேரமாகிவிடும் என்ற அச்சத்தில், பேருந்தை பின் தொடர்ந்து ஓடி, படியில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு, ஆபத்தான முறையில் நீண்ட நேரம் ஓடியுள்ளார். வெகு தூரம் மாணவியை ஓடவிட்ட பேருந்து ஓட்டுநர், சிறிது தூரம் சென்ற பிறகு பேருந்தை நிறுத்தியுள்ளார்.
அதன் பிறகு அந்த மாணவி பேருந்து ஏறிச் சென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வீடியோ வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அலட்சியமாக செயல்படும் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Read more: Summer Holiday | இன்றே கடைசி..!! 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடக்கம்..!!