இங்கிலாந்து தேர்தலில் நடந்த சுவராசியமான விஷயங்களில் ஒன்று, சாம் கார்லிங் என்ற 22 வயதாகும் இளைஞர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இடம்பெற உள்ளது தான். அவர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கே காணலாம்
பிரிட்டன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்கிறது. கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்தியா வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக் பதவியை இழக்கிறார். பிரிட்டனில் மொத்தமுள்ள 650 இடங்களில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றது. அதனைத்தொடர்ந்து, தொழிலாளர் கட்சியின் தலைவரான கியர் ஸ்டார்மர் தான் புதிய பிரதமராகப் பதவி ஏற்றார்.
தேர்தலில் நடந்த சுவராசியமான விஷயங்களில் ஒன்று, சாம் கார்லிங் என்ற 22 வயதாகும் இளைஞர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இடம்பெற உள்ளது தான். வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு கிராமத்தில் 2002-ம் ஆண்டு பிறந்தவர் தான் சாம் கார்லிங் . கேம்பிரிட்ஜ், கிறிஸ்ட் கல்லூரியில் இளங்கலை படித்துள்ளார். 2023-ம் ஆண்டில் தான் இவரது இளங்கலை கல்லூரி படிப்பு முடிந்துள்ளது. இவருக்கு, இளம் வயதில் இருந்தே அரசியலில் ஆர்வம் அதிகம் இருந்திருக்கிறது. அதனால், கல்லூரி காலத்திலேயே இவரது அரசியல் பயணம் தொடங்கிவிட்டது.
தொழிலாளர் கட்சி சார்பாக வடமேற்கு கேம்பிரிட்ஜ்ஷையரின் நாடாளுமன்ற வேட்பாளராக களம் இறங்கினார். இவரது அரசியல் ஆர்வமும், பிரசார பேச்சும் வாக்காளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. பொது சேவை, உள்ளூர் பிரச்னை நிவர்த்தி ஆகியவை இவரது தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய இடத்தை பிடித்திருந்தன. இவருக்கு எதிராக, அதே தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த எம்.பி ஷைலேஷ் வாரா போட்டியிட்டுள்ளார். இருவருக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில், வெறும் 39 வாக்கு வித்தியாசத்தில் எம்.பி பதவியை தட்டிச் சென்றுள்ளார் சாம் கார்லிங்.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த இவர், “நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் பிரச்னைகளை களைவேன். இனி இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். தேர்தல்களில் போட்டியிட வேண்டும்” என்று கூறியியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.