தெருநாய்கள் கடித்ததில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் லத்தி தாலுகாவில் உள்ள தாம்நகர் கிராமத்தை சேர்ந்தவர் ரோனக் ரத்வா என்ற 3 வயது சிறுவன். விவசாய தொழிலாளியான சிறுவனின் பெற்றோர், மதுபாய் சித்பரா என்பவருக்கு சொந்தமான விவசாய வயலில் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுடன் சென்ற சிறுவன் அங்கு விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இந்நிலையில், அங்கு திடீரென வந்த தெரு நாய்கள் கூட்டம் சிறுவனை வெறித்தனமாக கடித்துள்ளது. இதில் சிறுவனின் தலை மற்றும் முதுகில் தெரு நாய்கள் பயங்கரமாக கடித்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், உடனடியாக சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.