சலூன் கடைக்காரர் முடி வெட்டும் போது நீங்கள் சொன்னபடி வெட்டாமல் தலையில் சம்பவம் செய்துவிட்டால் இனி கவலைப்பட வேண்டாம். இது போல நடந்தால் நஷ்ட ஈடு பெற முடியும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்…
முடி வெட்டும் போது நீங்கள் குறிப்பிட்ட முறையில் தான் வெட்ட வேண்டும் எனப் பக்கம் பக்கமாகச் சொல்லியும், சலூன் கடைக்காரர் “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” என்ற ரேஞ்சில் முடி வெட்டியிருப்பார். நம்மில் பலருக்கும் இதுபோல நடந்திருக்கும். அப்போது வெறு வழியில்லாமல் முடி வளரும் வரை நாம் புலம்பிக் கொண்டிருப்போம். ஆனால், இதுபோல நடந்தால் நாம் நஷ்ட ஈடு கூட பெற முடியும்
எப்படி என்றால், முடிவெட்டுவது என்பது அவர்கள் நமக்கு அளிக்கும் ஒரு வித சர்வீஸ் தான். நம்மிடம் காசை வாங்கிக் கொண்டு அந்த சர்வீஸை அவர்கள் செய்கிறார்கள். இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி சர்வீஸில் குறைபாடு இருந்தால், அதற்கு நஷ்டஈடு கோர முடியும். இதெல்லாம் நடக்கிற காரியமா எனக் கேட்க வேண்டாம். உண்மையில் இதற்காக ஒருவர் நஷ்ட ஈடும் வாங்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த 2018 ஏப்ரல் 12ஆம் தேதி நடந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த மாடல் ஒருவர் ஹேர் ஸ்டைலிங் செய்ய அங்குள்ள ஹோட்டல் ஐடிசி மவுரியாவில் உள்ள சலூனுக்குச் சென்றுள்ளார். அவருக்கு வழக்கமாக ஹேர் டிரைசிங் செய்யும் நபர், அன்றைய தினம் வரவில்லை. இதனால், வேறு ஒரு ஹேர் டிசைனரிடம் அவருக்கு ஸ்டைலிங் செய்துள்ளார். அவரிடம் குறிப்பிட்ட ஸ்டைலில் முடிவெட்டுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையே, ஹேர் ஸ்டைலிங் முடிந்ததும் அவருக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முடியை விளக்காக மட்டுமே வெட்டச் சொல்லியுள்ளார். இருப்பினும், முடியை அதிகமாக வெட்டிவிட்டாராம். வெறும் 4 அங்குலம் மட்டுமே இருக்கும் வகையில் முடியை வெட்டியுள்ளார்.
இது அவர் சொன்ன வழிகாட்டுதலுக்கு நேர்மாறாக இருந்ததாக அந்த மாடல் கூறுகிறார். இந்த தவறான ஹேர்கட் காரணமாகத் தனது மாடலிங் தொழில் பாதிக்கப்பட்டதாகவும் இதனால் தான் பல மாடலிங் வாய்ப்புகளை இழந்ததாகவும் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் தான் மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். இதையடுத்து, அந்த மாடல் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மையத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னிடம் அவர்கள் எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த தவறான ஹேர் டிசைனிங்கால் தனக்கு மன அழுத்தம், வேலை இழப்பு, வருமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறி ரூ. 3 கோடி இழப்பீடு கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் பாதுகாப்பு மையம், இரு தரப்பிற்கும் இடையே இ-மெயில் உரையாடல்கள், அந்த மாடல் நிரப்பிக் கொடுத்த விண்ணப்பம், ஹேர் டிசைனுக்கு பிறகு எடுக்கப்பட்ட போட்டோ ஆகியவற்றை ஆய்வு செய்து தவறாக ஹேர் கட் செய்யப்பட்டதை உறுதி செய்தது. இதையடுத்து, அந்த மாடலுக்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டது. அந்த மாடலுக்கு இலவசமாக மீண்டும் ஹேர் டிரீட்மென்ட்டையும் சலூன் அளித்தது.
இந்த வழக்கில் 2 கோடி ரூபாய் நஷ்ட ஈட்டிற்கு எதிராக ஐடிசி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது தனிக்கதை. இருப்பினும், அதிலும் கூட நஷ்டஈடு வழங்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட் சொல்லவில்லை. நஷ்டஈடு என்பது வெறுமன ஒரு தரப்பின் கோரிக்கை அடிப்படையில் இருக்கக் கூடாது என்றும் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே கொடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தது. அதாவது சுப்ரீம் கோர்டும் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கிறது.
2 கோடி ரூபாய் என்பது அதிகம் என்றே சொல்லி நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது. இதில் இருந்து ஒரு விஷயம் நன்கு தெரிந்து கொள்ளுங்கள். சலூன் கடைக்காரர் உங்கள் தலையில் சம்பவம் செய்தால், புலம்பித் தீர்ப்பது மட்டும் தீர்வு இல்லை. அதை எதிர்த்து முறையிட்டால் உங்களுக்கு நஷ்டஈடும் கிடைக்கும். ஆனால், நீங்கள் என்ன மாதிரி கட் செய்யச் சொன்னீர்கள், அவர் என்ன மாதிரி கட் செய்தார் என்பது குறித்தெல்லாம் உங்களிடம் உரிய ஆதாரங்கள் இருக்க வேண்டும். இந்த மாடல் கேஸில் இ-மெயில் உரையாடலும், விண்ணப்பத்திலும் அவர் தனக்கு என்ன மாதிரி ஹேர் டிசைன் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். தவறாகிப் போன ஹேர் டிசைனிற்கு பிறகு போட்டோக்களையும் எடுத்துள்ளார். இதுவே நஷ்டஈடு பெற ஆதாரமாக இருந்துள்ளது. எனவே, நீங்களும் ஆதாரத்துடன் நுகர்வோர் மையத்தை அணுகினால் உங்களும் தீர்வு கிடைக்கும்.