பீகார், பெகுசாய் பகுதியில் உள்ள கந்தக் நதியின் மீது பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இது தொடர்பாக, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள், சாலை போராட்டங்கள் முதல் சட்டசபை வரை தங்கள் கோரிக்கையை வலுவாக எழுப்பினர். 2012-13ம் ஆண்டு, பாலம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது.
14 கோடி செலவில் 206 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம் முதலமைச்சர் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. 2016ம் ஆண்டு பாலம் கட்டும் பணி துவங்கி, 2017ல் முடிவடைந்தது. ஆனால், அணுகுசாலை இல்லாததால், பாலத்தில் போக்குவரத்து துவங்கவில்லை. கட்டுமான பணிகள் முழுவதுமாக முடிந்துள்ள இந்த பாலம் இன்னும் போக்குவரத்துக்கு திறக்கப்படவில்லை. இந்த பாலத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
இந்நிலையில் இன்று காலை இந்த பாலம் இடிந்து விழுந்தது. போக்குவரத்துக்கு திறக்கப்படவில்லை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பயன்பாட்டிற்கு வரலாமலே பாலம் இடிந்து விழுந்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.