எனது கணவருக்கு ஆண்மை குறைவு இருப்பதால், அவரது அண்ணன் எனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பாலை அய்யப்பன் நகர் தாமரை வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ”எனக்கும் துருண் குமார் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. மதுரை பாலமேடு அரசு கால்நடை மருத்துவமனையில் துருண்குமார் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். திருமணத்தின்போது எனது பெற்றோர் 50 பவுன் நகை, ரூ. 5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை கொடுத்தனர். மேலும், ரூ.10 லட்சம் செலவில் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில், திருமண நாள் அன்று அவருக்கு ஆண்மை குறைபாடு உள்ளது என தெரியவந்தது. இருந்தபோதிலும் வேறு வழியின்றி அவருடன் குடும்பம் நடத்தி வந்தேன். இந்நிலையில், துருண் குமாரின் அண்ணன் அருண்குமார் எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதற்கு அவரது மனைவி திவ்யா, அவரது தாய் தனலட்சுமி மற்றும் உறவினர் சரவணன் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.

எனவே, நான் இது தொடர்பாக கணவரிடம் புகார் செய்தேன். அப்போது அவர் என் சகோதரரை அனுசரித்து நடந்து கொள் என்றார். இந்நிலையில், துருண்குமார் குடும்பத்தினர் வரதட்சணையாக மேலும், ரூ.10 லட்சம் வாங்கி வரும்படி என்னை மிரட்டினார்கள். இதற்கு நான் மறுத்தேன். இதனால், அவர்கள் என்னை பட்டினி போட்டு கொல்ல பார்க்கிறார்கள். எனவே, போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.