தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆறு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வதந்தி பரவியதால் மருத்துவமனை டீன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடி ராஜபாண்டி நகரைச் சார்ந்தவர் முனீஸ்வரன் கூலி தொழிலாளியான இவருக்கு மகாலட்சுமி என்ற ஆறு வயது மகள் இருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனது மகளை அனுமதித்தார் முனீஸ்வரன். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகாலட்சுமி கடந்த 12-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக மகாலட்சுமி டெங்கு காய்ச்சலால் தான் இறந்தார் என செய்தி ஊர் முழுக்க பரவியது. இது தொடர்பாக அவரது பெற்றோருக்கு விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் சிவக்குமார் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் மகாலட்சுமி என்னும் ஆறு வயது குழந்தையை மிகவும் தாமதமாகவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர் அதுவே அவரது இறப்பிற்கு முக்கிய காரணம். குழந்தை மருத்துவமனைக்கு வரும்போது அதன் ரத்த அணுக்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு விட்டன. தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து நம்மால் முடிந்த அளவு சிகிச்சை அளித்தோம் ஆனாலும் குழந்தை பரிதாபமாக இறந்து விட்டது என தெரிவித்தார். மேலும் குழந்தைக்கு காய்ச்சல் தான் இருந்தது எனவும் டெங்கு இல்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் குழந்தை டெங்கு வார்டில் தங்கி சிகிச்சை பெறவில்லை எனவும் விளக்கம் அளித்தார் மருத்துவமனை டீன்.