திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, கணவன் அல்லது மனைவி இருக்கும் போதே வேறு பெண் அல்லது ஆண் உடன் சேர்ந்து வாழ்வது போன்ற உறவுகள் சட்டப்படி செல்லாத திருமணங்கள் ஆகும். இதுபோன்ற உறவுகளில் பிறந்த குழந்தைகள், பெற்றோர் சொத்துக்களில் உரிமை கோருவது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.
அதில், ‘சட்டப்படி செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகள், பெற்றோரின் பரம்பரை சொத்துக்களில் பங்கு கோர உரிமை உள்ளது’ என தெரிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ‘சட்டப்படி செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகள், பெற்றோர் சொந்தமாக உழைத்து சம்பாதித்த சொத்துக்களில் பங்கு கோர உரிமை உள்ளது. அதே நேரம், பரம்பரை சொத்துக்களில் அவர்கள் உரிமை கோர முடியாது’ என கடந்த 2011-இல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அளிக்கப்பட்டது. அதில், “சட்டப்படி செல்லாத திருமணங்கள் மற்றும் சட்டப்படி பிரியாத தம்பதியரின் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமாக சொத்துக்களில் பங்கு கோர உரிமை உள்ளது. இந்து வாரிசு சட்டத்தின் படி மட்டுமே அவர்கள் சொத்துக்களில் உரிமை கோர முடியும். ஆகையால், பெற்றோரின் உழைப்பில் சம்பாதித்த சொத்து மற்றும் பரம்பரை சொத்துக்களில் பங்கு கோரவும் அவர்களுக்கு உரிமை உள்ளது” என்று தீர்ப்பளித்தது.