மகளையும், மகனையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சித்ரவதை செய்த கொரூர தாய், ஆண் நண்பருடன் கைது.
டெல்லியில் ஆதரவின்றி திரிந்த 11 வயது சிறுமியை பொதுமக்கள் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள், குழந்தைகள் நலக் குழுவின் பராமரிப்பில் ஒப்படைக்கப்படனர். அங்குச் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாகச் சிறுமியிடம் விசாரிக்கப்பட்டதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
சிறுமி அளித்த வாக்குமூலத்தில்,“உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் என் அம்மாவுடன் நானும்(11) எனது அண்ணாவும்(13) வசித்து வந்தோம். கொரொனா காலத்தில் எனது அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு அம்மாவின் ஆண் நண்பர் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வார். அப்போது அவர் என்னிடம் தவறாக நடந்து கொள்வார். இதைப்பற்றி அம்மாவிடம் தெரிவித்தேன். இதை வெளியே சொல்ல கூடாது என விரல்களை வெட்டி சித்ரவதை செய்தார்.
என் அண்ணாவையும் அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். இதனால் அண்ணா வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டான். அம்மா பாலியல் தொழில் செய்கிறார் என அறிந்துகொண்டேன். என்னையும் அதில் ஈடுபட வைக்க விரும்பினார் என்பதையும் தெரிந்துகொண்டேன். அதனால் வீட்டை விட்டு ஜனவரி 20-ம் தேதி வந்துவிட்டேன்” என சிறுமி தெரிவித்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை,“தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக டெல்லியில் வசிக்கும் ராஜு என்பவனைச் சிறுமி அடையாளம் காட்டினார். சிறுமி மாயமான பிறகும் அவரின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. குழந்தையின் தாயும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.