மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கு, பதிவு கட்டணத்தில் 1% குறைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பானது ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சமூகத்தில் மட்டுமன்றி அவரவர் குடும்பங்களிலும் பெண்களுக்கான சம பங்கை உறுதி செய்யும் வகையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரூ.10 லட்சம் வரையிலான வீடு, மனை, விவசாய நிலம் போன்ற அனைத்து அசையா சொத்துகள், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால், பத்திரப்பதிவுக்கான கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
அதன்படி, மகளிர் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவு கட்டணம் 1% குறைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையும் வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, அனைத்து பத்திரப்பதிவு அலுவலர்களும், இந்த அரசாணையை பின்பற்றுமாறு பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, பெண்கள் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கு, பதிவு கட்டணத்தில் 1% குறைப்பு இன்று முதல் அதாவது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக பதிவுத்துறை செயலர் குமார்ஜெயந்த் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பதிவுக் கட்டணமாக 2% வசூலிக்கப்படும் நிலையில், அதிகபட்சம் ரூ.10 லட்சத்துக்கு ரூ.20 ஆயிரம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், தற்போதைய புதிய அறிவிப்பின்படி, பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்தால், ரூ.10 ஆயிரம் செலுத்தினால் போதும். இதன் மூலம் ரூ.10 ஆயிரம் மிச்சமாகும். ரூ.10 லட்சம் வரையிலான சொத்துகளுக்கு மட்டுமே இது பொருந்தும். ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான சொத்துகளை பதிவு செய்யும் மகளிர் இந்த சலுகையை பெற முடியாது.