கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதோபோல் ஒரு சிலர் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மகளிர் பிரிவில் 50 வயதான பெண், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திடீரென அந்த பெண் தங்கியிருந்த அறைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், மது போதையில் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனடியாக கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அந்த இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த இளைஞர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். சிகிச்சைக்காக வந்த 50 வயது பெண்ணுக்கு மதுபோதையில் இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.