ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள டூகான் நிறுவனம் 90% ஊழியர்களை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.
சமீபகாலமாக இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் உள்ள நிறுவனங்களில் இருந்து வேலைநீக்க செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்தியாவில் உள்ள மொபைல் செயலி நிறுவனங்களில் ஒன்றான டூகான் என்ற ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனம், தனது நிறுவனத்தில் பணிபுரிந்த 90% ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிறுவனம் ஏற்கனவே கடந்த 6 மாதங்களுக்கு முன் வேலை நீக்க நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், தற்போது மீண்டும் 90% ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் சில்லறை தொழில்நுட்ப தளத்தில், தங்கள் பிராண்டுகளை அதிகரிக்க கவனம் செலுத்த இருப்பதாகவும், நிறுவனத்தின் வருமானம் குறைந்து உள்ளதால் பணிநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் சாதனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு சாதனங்களை பயன்படுத்தியதன் மூலம் வாடிக்கையாளர் சேவைச் செலவு 85% குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர் கூறும் குறைகளை சரி செய்யும் நேரமும் 120 நிமிடங்களில் இருந்து 3 நிமிடமாக குறைத்து விட்டதாக விளக்கம் அளித்துள்ளது.