வேலூர் மாவட்டம் இலவம்பாடி கிராமம் கருநிகர் தெருவில் வசிப்பவர் சுரேஷ் (30). கட்டிட மேஸ்திரியான இவருக்கு லதா (29) என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. மேலும், கணவன்-மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு காரணமாகவும், சுரேசுக்கு குடிப்பழக்கம் இருந்ததாலும் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது லதா, சுரேஷை திட்டி தாக்கியதாக தெரிகிறது.
மேலும், லதா வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து சுரேஷ் மீது ஊற்றி, கண் இமைக்கும் நேரத்தில் தீப்பெட்டியை எடுத்து தீ வைத்துள்ளார். உடனே அவர் உடல் முழுவதும் தீ பரவியதால் சுரேஷ் வலியால் அலறி துடித்துள்ளார். பின் அவரது சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து, அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, 90 சதவீதம் தீக்காயம் அடைந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் அங்கு வந்த போலீசார் சுரேஷிடம் வாக்குமூலம் பெற்றனர். பின்னர் அவர் மனைவியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.