ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக, ஏர் இந்தியா விமானம் தொடர்பாக பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில், தற்போது டெல்லி விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன் ஹீத்ரோ நகருக்கு ஏர் இந்திய விமானம் AI-111 இன்று காலை 6.35 மணிக்கு புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அதில் டெல்லியில் இருந்து ஏறிய பயணி ஒருவர் விமான ஊழியர்கள் இருவரை தாக்கியதோடு, அவர்களை கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார். விமான ஊழியர்களை தாக்கியபோது அருகில் இருந்த பயணிகள் அவரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த பயணி, சகபயணிகளையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நடுவானில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, உடனடியாக அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர், விமான ஊழியர்களை தாக்கிய பயணியை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும், விமான ஊழியர்களை தாக்கிய பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின்பு, விமானம் டெல்லியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா விமானம் மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”AI-111 என்ற விமானத்தில் பயணி ஒருவர் தவறாக நடந்துக் கொண்டதால் ஏற்பட்ட அசெளகரியத்துக்கு மன்னிக்கவும். இதுபோன்று வருங்காலங்களில் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விமான ஊழியர்களை தாக்கிய பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.