நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
தமிழக பட்ஜெட் 2025 முக்கிய அறிவிப்புகள்
நாட்டிலேயே பரவலான சாலை வசதிகளைக் கொண்ட மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் 16,500 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 2130 கி.மீ. முக்கியச் சாலைகள் நான்குவழி மற்றும் இருவழிச் அகலப்படுத்தப்பட்டுள்ளன.
5.000 கி.மீ.க்கும் அதிகமான ஊராட்சி ஒன்றியச் சாலைகள் பிற மாவட்ட சாலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் கையாளும் விதமாக, சென்னை நகரின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி பகுதி வரை 14.2 கி.மீ. நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை 2100 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.
தமிழ் நிலப்பரப்பைச் சார்ந்த வேம்பு, புங்கை”, “நாவல், புளியமரம் போன்ற இனவகைகளில் 10 இலட்சம் மரங்கள் நடப்பட்டு, புவிசார் குறியிடப்பட்டு முறையாகப் பராமரிக்கப்படும்.
ஒரகடம்-செய்யார் தொழில் வழித்தடம் உருவாக்கப்படும். இதனால், செய்யார் தொழிற்பூங்காவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த வழிவகை ஏற்படும்.
இதற்காக, 250 கோடி ரூபாய் மதிப்பில் முதற்கட்டப் பணிகள் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும்.