மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடாததால் நண்பனை சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லவன் சாலை காந்தி நகரை சேர்ந்தவர் பவுல்ராஜ் (23). ரவுடியான இவர் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி லோகேஷ் (26) என்பவருடன் பவுல்ராஜ் நண்பராக இருந்தார். இதனால் லோகேஷ் வீட்டிற்கு பவுல்ராஜ் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது லோகேஷ் மனைவி சத்யாவுக்கும், பவுல்ராஜூக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதனால் நண்பர் லோகேஷ் வீட்டில் இல்லாத போது, பவுல்ராஜ் சத்யாவுடன் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளார். இவர்களின் கள்ளக்காதல் கடந்த ஒரு வருடமாக லோகேஷுக்கு தெரியாமல் இருவரும் பார்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் நண்பர்கள் மூலம் இந்த விவகாரம் லோகேஷிற்கு தெரியவந்தது. இதுதொடர்பாக தனது மனைவி சத்யா மற்றும் நண்பர் பவுல்ராஜை பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி தனது மனைவியுடன் பவுல்ராஜ் ஒன்றாக இருந்ததை பார்த்து இருவரையும் லோகேஷ் கண்டித்துள்ளார். அதன்பிறகு கள்ளத்தொடர்பை கைவிடாததால் கடந்த வாரம் லோகேஷ் தனது நண்பனான பவுல்ராஜை சரமாரியாக வெட்டினார்.
அப்போது, பவுல்ராஜ் தப்பித்து ஓடினார். ஆனாலும், ஆத்திரம் தீராத லோகேஷ், ஓட ஓட விரட்டி நண்பனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பவுல்ராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், பவுல்ராஜ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, திருவல்லிக்கேணி போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி, லோகேஷை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.