பரம்பரை பரம்பரையாக மாடு வளர்ப்பில் ஈடுபடுபவர்களே பால் பண்ணையில் போதிய வருமானம் இல்லை என்று கூறி வரும் நிலையில், சரியான திட்டமிடுதலுடன் மாடு வளர்ப்பில் ஈடுபட்டால், நல்ல லாபம் பெற முடியும். பசுக்களில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்து உங்களால் கை நிறைய சம்பாதிக்க முடியும். அந்த வகையில், இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்டம் கூன் கிராமத்தைச் சேர்ந்தவர் சகீனா தாக்கூர் என்ற பெண், பால் விற்பனை மற்றும் மாட்டுச் சாணம் மூலம் மாதம் ரூ.2 லட்சம் வருமானம் ஈட்டும் தொழில் முனைவோராக மாறியிருக்கிறார்.
வரலாறு பட்டதாரியான சகீனா தாக்கூர் கூறுகையில், ”நான் சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண். எங்கள் கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் பால் தண்ணீராகவும், தரம் குறைந்ததாகவும் இருப்பதை கவனித்தேன். நான் கல்லூரி படிக்கும்போதே, மக்களுக்கு நல்ல தரமான பால் வழங்க வேண்டும் என்ற யோசனை இருந்தது. ஆனால், அப்போது என்னால் இதை சாத்தியப்படுத்த முடியவில்லை. வீட்டில் உள்ளவர்கள் அரசு வேலைக்குப் போக வேண்டுமென கூறினார்கள்.
பின்னர், படித்து முடித்துவிட்டு சுகாதாரத்துறை சர்வேயராக சிறிது காலம் பணியாற்றினேன். அப்போது வந்த சம்பளத்தில் ரூ.1.25 லட்சம் சேமித்து வைத்திருந்தேன். அத்துடன் ரூ.2 லட்சத்தை வங்கியில் இருந்து கடனாக பெற்று, பால் பண்ணையை தொடங்கினேன். பசு மாடுகள் வாங்கும்போது புரத சத்து நிறைந்த அதிக பால் தரக்கூடிய பசு மாடுகளைத் தேர்வு செய்தேன்.
எங்கள் பண்ணையில் ஹால்ஸ்டீன் ஃப்ரீசியன் பசுவுடன் அதிக பால் தரக்கூடிய 14 பசுக்கள் உள்ளன. இதிலிருந்து தினமும் 112 லிட்டர் பால் கிடைக்கிறது. அடுத்ததாக, நவீன வசதிகளுடன் கூடிய கொட்டகை அமைத்தேன். பால் கறக்கும் இயந்திரம், தீவனம் வெட்டும் இயந்திரம், பால் குளிர்விப்பான் ஆகியவற்றை அடுத்தடுத்து வாங்கினேன். மேலும், எங்கள் பண்ணையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினோம். மாட்டுச் சாணத்தை கரிம உரமாக மாற்றி விற்பனை செய்தோம்.
எங்கள் ஊரில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்களை ஒன்றிணைத்து பெண்கள் தலைமையிலான பால் கூட்டுறவு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம், அரசாங்கத்திடம் இருந்து எங்களுக்கு உதவி கிடைத்தது. மேலும், இமாச்சலப் பிரதேச மாநில பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சில இயந்திரங்களையும், தொழில்நுட்பங்களையும் வழங்கி எங்களுக்கு உதவியது.
அதேசமயம், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் கொள்கைகளால் பால் கொள்முதல் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது எங்களுக்கு லிட்டருக்கு ரூ.41 முதல் ரூ.44 கிடைக்கிறது. இந்த விலை உயர்வு எங்கள் வருவாயை நன்றாக அதிகரித்துள்ளது. தற்போது, பால் மற்றும் சாணம் விற்பனை மூலம் மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : தமிழ்நாட்டில் திருமணம் ஆகாத, மனைவியை இழந்த ஆண்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 பென்ஷன்..!! உண்மை என்ன..?