கும்பமேளாவில் பங்கேற்று விட்டு, காரில் நேபாளத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மவுனி அமாவாசையை முன்னிட்டு கடந்த 29ஆம் தேதி பிரயாக்ராஜில் சுமார் 10 கோடி பக்தர்கள் திரண்டதால் மகா கும்பமேளாவில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி சுமார் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 60-க்கும் மேற்பட்டோற் படுகாமடைந்தனர்.
இந்நிலையில், கும்பமேளாவில் பங்கேற்று விட்டு, காரில் நேபாளத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கும்பமேளா நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக நேபாளத்தைச் சேர்ந்த 9 பேர் காரில் வந்துள்ளனர். பின்னர், கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு நேற்று 9 பேரும் காரில் மீண்டும் நேபாளத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
அப்போது, பீகாரின் முசாபர்நகர் மாவட்டம் மதுபானி நகரில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுக் கொண்டிருந்த போது, அங்கு சிலர் பைக் சாகசம் செய்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மீது கார் மோதுவதை தவிர்க்க முயன்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்புச் சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.