தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லீ. வெறும் சில திரைப்படங்களே இயக்கியிருந்தாலும், துல்லியமான காட்சிப்பதிவு மற்றும் வணிக வெற்றிகளைப்பொறுத்து, இவர் முன்னணி இயக்குநராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். இயக்குநர் ஷங்கரின் உதவியாளராக “எந்திரன்” மற்றும் “நண்பன்” போன்ற வெற்றி படங்களில் பணியாற்றிய அட்லீ, ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராகத் தொடங்கினார்.
அதன்பின்னர் விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். இந்த வெற்றிப் பாதையை தொடர்ந்து ஹிந்தி திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். ஷாருக்கானுடன் இணைந்து உருவான ஜவான் திரைப்படம் பாராட்டு பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை படைத்தது.
புஷ்பா படத்தின் மூலம் உலக புகழ் பெற்ற அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படம், அல்லு அர்ஜுனின் 22வது திரைப்படமாகவும், அட்லீயின் 6வது படமாகவும் அமைகிறது.
பிரம்மாண்ட தயாரிப்பில் AA22 x A6: இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், சன் பிக்சர்ஸ் தலைவர் கலாநிதி மாறன், இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோர் தோன்றி ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றனர். மேலும், அமெரிக்காவில் உள்ள முன்னணி கிராஃபிக்ஸ் ஸ்டூடியோ ஒன்றை அல்லு அர்ஜுனும், அட்லீயும் நேரில் சென்று பார்வையிடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அங்கு பணியாற்றும் டெக்னீஷியன்கள், படத்தின் கதையைப் பற்றி பேசும் போது அதனைப் பாராட்டும் விதமாகக் கருத்து தெரிவிக்கின்றனர்.
லண்டனில் இந்த படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த விடியோவை பார்க்கும்போது இந்த படம் ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இதற்கு முன்னதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்த நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் மற்றும் 2.0 என்ற சைன்ஸ் ஃபிக்ஷன் படங்களை உருவாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த கூட்டணி, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது.
சம்பள விவகாரமும் ஹைலைட்: இப்படத்திற்கு அல்லு அர்ஜுன் பெறும் சம்பளம் ரூ.200 கோடியாகவும், இயக்குநர் அட்லீக்கு ரூ.100 கோடி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்துக்கு 600 கோடி ரூபாயை பட்ஜெட்டாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லை.