வடக்கில் உள்ள காசி திருத்தலத்திற்கு செல்ல முடியாதவர்கள், தெற்கில் உள்ள இந்த காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு வந்து அருளைப் பெற வேண்டும் என்பதற்காக கட்டப்பட்டதால் தென்காசி என பெயர் பெற்றது. தென்காசியில் கோயில் கொண்டிருக்கும் காசி விஸ்வநாதர் கோயில். இந்தக் கோயிலின் சிறப்புகள் பற்றி பார்க்கலாம்.
கோயில் உருவான வரலாறு : தென்காசியை பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு காசிக்கு சென்று அங்குள்ள காசி விஸ்வநாதரை அடிக்கடி வழிபாடு செய்வது வழக்கமாக இருந்துள்ளது. அவனின் பக்தியில் மெச்சிய குலதெய்வமான முருகப்பெருமான் அபூர்வ குளிகை ஒன்றை குறித்து கொடுத்து வான் மார்க்கமாக காசிக்கு சென்று வழிபட செய்தார். ஆனால் அவனால் காசிக்கு தினமும் சென்று வழிபாட முடியாத வருத்தம் இருந்தது. இதனால் வருத்தமுற்ற மன்னனின் கனவில் தோன்றிய இறைவன் நான் இங்கு தான் இருக்கிறேன். நான் இருக்கும் இடத்தை நீ காண வேண்டும் என்றால் உனக்கு எறும்புகள் வழிகாட்டும்.
எங்கு எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து செல்கிறதோ அதனை கவனித்துக் கொண்டே செல்லவும். ஓர் இடத்தில் அதன் பாதை முடியும். அங்கு தான் நான் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். மறுநாள் எறும்புகள் செல்லும் திசையை கண்டறிந்து அங்கு ஒரு சிவலிங்கமும் நந்தியும் இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். அந்த சமயத்தில் காசிக்கு தெற்கிலிருந்து பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் அந்த புனித இடத்தை அடைவதற்கு முன்பே பல்வேறு சூழ்நிலைகளால் மரணித்து விடும் சூழல் இருந்தது.
அதனால் அப்படிப்பட்டவர்கள் அருள் பெற வேண்டும் என எண்ணி தெற்கு பகுதியில் காசிக்கு கோபுரம் கட்டு என இறைவன் ஆணையிட்டதின் பெயரில் கோயில் கட்டப்பட்டது. இந்த ஊர் தென்காசி என அழைக்கப்பட்டது. 1445 ஆம் ஆண்டு பராக்கிராம பாண்டியனால் ராஜகோபுரம் திருப்பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின் அந்த பட்டத்துக்கு வந்த அவனின் தம்பி சடையவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில்தான் அனைத்தும் நிறைவடைந்தது என கல்வெட்டுகள் தெரிவிக்கிறது.
சிறப்பு : இந்த இராஜ கோபுர வாசலில் பக்தர்களுக்கு ஆச்சரியப்படத் தக்க அதிசயம் காத்திருக்கிறது. பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று, கோபுர வாசலுக்குள் நுழையும் பக்தர்களுக்கு எதிராக மேற்கிலிருந்து கிழக்காக வீசி வரவேற்கிறது. கோபுர வாசலை கடந்து உள்ளே போகும் போது, கோபுர வாசலில் இருந்து இறங்கும் இடத்தில், காற்று சுழன்று சுற்றி வீசுவது போல ஒரு அனுபவம் ஏற்படும். தொடர்ந்து உள்ளே செல்லும் போது, காற்று உங்கள் பின் புறமாக கோவிலுக்குள் உங்களை உள்ளே தள்ளுவது போல, கிழக்கில் இருந்து மேற்காக காற்று வீசும் அதிசயம் உணர்வீர்கள்.
Read more: GST என்றால் என்ன..? அதன் நோக்கம் மற்றும் நன்மைகள் என்னென்ன..? A முதல் Z வரையிலான தகவல் இதோ..