மனைவியுடன் ஒருமித்த ‘இயற்கைக்கு மாறான’ உடலுறவுக்கு கணவர் பொறுப்பேற்க முடியாது என்று மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவையின் உறுப்பினர் உமங் சிங்கார், பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஐபிசியின் 377 (இயற்கைக்கு மாறான) பிரிவின் கீழ் குற்றம் செய்ததாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் எஃப்ஐஆர் போடப்பட்டது. இதுதொடர்பான வழக்கு அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் திவேதி, சாதாரண உடலுறவு என்று கருதப்படுவதைத் தாண்டி கணவன்-மனைவி இடையே நடக்கும் எதையும் ‘இயற்கைக்கு மாறான’ உடலுறவு என்று திட்டவட்டமாக முத்திரை குத்த முடியாது என்று கருத்து தெரிவித்தார்.
திருமண உறவு என்பது இனப்பெருக்கத்திற்காக மட்டும் அல்ல என்று கூறி, எம்.எல்.ஏ. உமங் சிங்கரின் மனைவி சமர்ப்பித்த முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) நீதிபதி சஞ்சய் திவேதி நிராகரித்தார். இந்தியச் சட்டம் தற்போது திருமணக் கற்பழிப்பை அங்கீகரிக்காததால், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 377ன் கீழ் தனது மனைவியுடன் ஒருமித்த ‘இயற்கைக்கு மாறான’ உடலுறவுக்கு கணவர் பொறுப்பேற்க முடியாது என்றும் நீதிபதி கூறினார்.