காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில், நோபல் பரிசு பெற்ற காலநிலை, மற்றும் சுற்றுச்சூழல் நிபுணரான கலாநிதி மொஹான் முனசிங்க சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ”வளர்ந்த நாடுகள் இயற்கை வளங்களை அதிகமாக நுகர்வதால் பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது, உலகின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏழை நாடுகள் அதிகம் பாதிக்கப்படும்.
அழிவை ஏற்படுத்த ஆயுதங்களுக்கு செலவிடப்படும் தொகை 2 டிரில்லியன் டாலர்கள். ஆனால், சமுதாயத்தின் வளர்ச்சிக்காக செலவிடப்படும் தொகை மிகவும் குறைவு தான்” என்று பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க உலக நாடுகளும், தலைவர்களும், குடிமக்களும் தவறினால், 2050ஆம் ஆண்டுக்குள் பூமியின் பெரும் பகுதி அழிந்து விடும். உலகம் 2100-ல் மழைக்காடுகளும், 2050-ல் உணவும், 2048-ல் மீன்களும், 2040-ல் தண்ணீரும் இல்லாமல் போகலாம்” என்று தெரிவித்தார்.