ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் இருந்து வந்த மருது அழகுராஜின் பதிவுகள் பார்க்கும்போது, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதுபோல் தெரிவதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் நிர்வாகி மருது அழகுராஜ், விஜய்க்கு ஆதரவாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று எக்ஸ் தளத்தில், புரட்சித் தலைவரை “வாத்யாரே” என்றும், புரட்சித் தலைவியை “அம்மா” என்றும் அழைத்து நெகிழ்ந்து மகிழ்ந்த ஏழை எளிய சனங்கள் விஜய்யை “அண்ணா வா” அன்னைத் தமிழ் மண்ணை ” ஆள வா” என அழைக்கும் காலம் தொடங்கி விட்டது” என பதிவிட்டுள்ளார்.
மேலும், “100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள். பாரத தேசத்தை மாற்றிக்காட்டுகிறேன் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். ஆனால், இன்று ஆயிரமாயிரம் இளைஞர்கள் திராவிட அரசியலை மாற்ற அணிவகுத்துக் கொண்டிருக்கிறார்கள். தடுப்பதற்கு வழி தெரியாமல் கூட்டணி ஊன்றுகோலால் தங்களை தக்க வைக்க கையேந்தி பவன்களாக கழகங்கள்” என ஒரு பதிவில் பதிவிட்டுள்ளார். ஓபிஎஸ் அணியில் இருந்து வந்த மருது அழகுராஜ், அண்மைக்காலமாக தமிழக வெற்றிக் கழகத்தை புகழ்ந்து பதிவிட்டு வருவது, அவர் அக்கட்சியில் இணைய விரும்புவதையே காட்டுகிறது. மேலும், அவர் விரைவில் விஜய் கட்சியில் இணையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
யார் இந்த மருது அழகுராஜ்..?
மருது அழகுராஜ் 2008ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்து வருகிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஜெயலலிதா தொடங்கி முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலர் வரை பேசிய பிரபலமான பேச்சுகளுக்கு உரை எழுதிக் கொடுத்தவர் இவர் தான். ஜெயலலிதாவின் புகழ்பெற்ற பிரச்சார உரைகள் மட்டுமின்றி, எடப்பாடி பழனிசாமி அமைச்சரான பிறகு முதல் மானியக் கோரிக்கை பேச்சையும், சசிகலாவின் முதல் அறிக்கையையும், உரையையும் எழுதிக் கொடுத்தவர் இந்த மருது அழகுராஜ் தான்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ‘நமது எம்.ஜிஆர்’ நாளிதழின் ஆசிரியராக இருந்தவர். “மோடியா லேடியா?, மக்களால் நான் மக்களுக்காகவே நான்” ஆகிய ஜெயலலிதாவின் முழக்கங்களை உருவாக்கி பிரச்சார மேடைகளை அதிரவிட்டவர் மருது அழகுராஜ். ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்த ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளேட்டின் ஆசிரியராகத் தொடர்ந்தார் மருது அழகுராஜ். மேலும், சசிகலாவின் அரசியல் பிரவேசத்திற்கு அஸ்திவாரம் போட்டவர்களில் ஒருவர் இவர்.
ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இரட்டைத் தலைமையின் கீழ் இயங்கிய அதிமுகவுக்கு அதிகாரப்பூர்வ நாளிதழ் ‘நமது அம்மா’ எனும் பெயரில் தொடங்கப்பட்டது. இதற்கும் ஆசிரியராக மருது அழகுராஜ் நியமிக்கப்பட்டார். பின்னர், கடந்த 2022இல் ஓபிஎஸ், எடப்பாடி தரப்பால் ஓரங்கட்டப்பட்டதால், அதிருப்தி அடைந்து நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார். பிறகு, ஓபிஎஸ் அணியில் இருந்து அவர் கடுமையாக எடப்பாடி பழனிசாமி தரப்பை விமர்சித்து வந்தார். இந்நிலையில் தான், அவர் தற்போது விஜய் கட்சியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
Read More : Wipro நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!