தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, வரும் 21ஆம் தேதி மத்திய அரபிக் கடல் பகுதியில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இதன் காரணமாக தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்து வருகிறது.
அதன்படி, தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.