Heavy rain: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி(புயல் சின்னம்) உருவாகியிருப்பதாகச் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதுமுதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நவ.10ம் தேதி நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்று காலை 10 மணி அளவில் அதே பகுதியில் நீடித்தது. இதனால், 24 மணிநேரத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன்காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு சென்னையில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியிருந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி(புயல் சின்னம்) உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னம் தமிழகம் நோக்கி நகரும் பட்சத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 15ம் தேதிவரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றுமுதல் 2 நாட்களுக்கு தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடலிலும், வங்கக்கடலிலும் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.