தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகரும். இது அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு-மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 7ஆம் தேதி வரை தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு சூறாவளி சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த சூறாவளி சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவாகலாம் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மும்பை மற்றும் கொங்கன் பகுதி உள்ளிட்ட மகாராஷ்டிராவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, அது புயலாக உருவானால், அதற்கு “பைபர்ஜோய் புயல்” என்று பெயர் வைக்கப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளா, தமிழ்நாட்டில் வழக்கமாக ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும். ஜூன் 6ஆம் தேதி ஆன நிலையில் இதுவரை தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியே தென்படவில்லை. தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விரைவில் அறிவிக்க உள்ளது.