Online Gambling: உத்திரபிரதேச மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான ஒருவர் கடனை அடைப்பதற்காக தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலத்தின் ஃபதேபூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹிமான்சு. இவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. ஆன்லைனில் கேம் விளையாடி தோற்றதால் இவருக்கு 4 லட்ச ரூபாய் வரை கடன் இருந்திருக்கிறது. இந்நிலையில் தனது கடனை அடைப்பதற்காக நூதனமான ஒரு வழியை கண்டறிந்து இருக்கிறார் ஹிமான்சு.
இவரது திட்டப்படி தனது உறவினர் ஒருவரின் நகையை விற்று அந்தப் பணத்தில் தாயின் பேரில் 50 லட்ச ரூபாய்க்கு காப்பீடு எடுத்துள்ளார். தற்போது தாய் இறந்தால் பணம் கிடைக்கும் என்பதால் அவரது தாயை கொலை செய்து யமுனை ஆற்றில் வீசி இருக்கிறார். இந்த கொடூர கொலை தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் உண்மை வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஹிமான்சுவை கைது செய்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் .