கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் கைதான பெண் அளித்த வாக்குமூலத்தில் ஏற்கனவே ஒரு கொலை செய்து மாமிசத்தை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்னர், இந்த வழக்கில் முகமது ஷாபி, பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினமும் அவர்களிடம் நடத்தும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எவ்வாறு நரபலி கொடுத்தோம் என்றும், நரபலிக்குக்கு முன்பு 2 பேரையும் எவ்வாறு சித்ரவதை செய்தோம் என்பதையும் கைதானவர்கள் தெரிவித்திருப்பது காவல்துறையையே நடுங்க வைத்துள்ளது. இதையடுத்து, கைதான மூன்று 3 காவல்துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்து வருகின்றனர். மேலும், 3 பேரும் அளிக்கும் தகவல்கள் ஒன்று போல இருக்கிறதா? என்பதை பரிசோதிப்பதற்காகவும் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அந்தவகையில், தற்போது மேலும் அதிர்ச்சியூட்டும் ஒரு வாக்குமூலம் கிடைத்துள்ளது. இரண்டு பெண்களையும் நரபலி கொடுப்பதற்கு முன்பு ஷாபி அடிக்கடி பகவல் சிங்கின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது, எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணை அவர் ஏற்கனவே கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த மனித மாமிசத்தை விற்பனை செய்ததில் 20 லட்சம் ரூபாய் வரை கிடைத்துள்ளதாகவும் ஷாபி தெரிவித்ததாக லைலா வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது தொடர்பாக ஷாபியிடம் விசாரித்த போது, தான் லைலாவை நம்ப வைப்பதற்காகவே அவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனாலும், ஷாபி கூறியதை போலீசார் நம்பவில்லை. இதனால், சமீபத்தில் எர்ணாகுளத்தில் காணாமல் போன பெண்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதற்கிடையே, ஷாபிக்கு மேலும் பெண்களின் பெயரில் 2 போலி பேஸ்புக் கணக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
சஜ்னா, ஸ்ரீஜா என்ற பெயரில் இந்த கணக்குகள் உள்ளன. ஏற்கனவே ஸ்ரீதேவி என்ற போலி பெயரில் தொடங்கிய ஃபேஸ்புக் கணக்கில் இருந்து தான் பகவல் சிங்கை ஷாபி ஏமாற்றினார். அதேபோல இந்த கணக்குகளில் இருந்தும் ஷாபி யாரையாவது ஏமாற்றியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். லைலா கூறிய இந்ததகவல் போலீசுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.