இந்தியாவில் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது ஆதார் கார்டு. சிம் கார்டுகள் வாங்குவது துவங்கி வங்கி கணக்கு ஆரம்பிப்பது போன்ற பல விஷயங்களுக்கு ஆதார் கட்டாயம் தேவை. அத்துடன் அரசின் பலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியம். இந்நிலையில் தான், மத்திய அரசு ஒரு புதிய ஆதார் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பயனர்கள் தங்களை டிஜிட்டல் முறையில் அங்கீகரித்து, மேம்பட்ட பாதுகாப்பு, தனியுரிமையுடன் தங்கள் ஆதார் தரவை அனுப்பலாம்.
இந்த புதிய செயலியின் மூலம் பயனர்கள் தங்கள் அனுமதியுடன் மட்டுமே தேவைக்கேற்ப தரவைப் பகிர முடியும். இந்த செயலியில் முக அடையாள சரிபார்ப்பும் இருக்கிறது. இதன் மூலம் பாதுகாப்பு வலுப்படுகிறது. எவ்வித பிரச்சனைகளும் இன்றி வெரிஃபிகேஷன் நடக்கிறது. இதன் மூலம் யுபிஐ கட்டணம் செலுத்துவது போல, கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தே ஆதார் சரிபார்ப்பு சாத்தியமாகியுள்ளது. இந்த செயலி வலுவான தனியுரிமை பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆதார் தகவல்களை ஜெராக்ஸ் எடுக்கவோ, மாற்றியமைக்கவோ அல்லது தீங்கிழைக்கும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவோ முடியாது. மேலும், பயனரின் ஒப்புதலுக்குப் பிறகு தரவு பரிமாறிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. எனவே, பயனர்கள் இனி ஹோட்டல்கள், கடைகள், விமான நிலையங்கள் அல்லது மற்ற இடங்களில் ஆதார் அட்டை நகல்களை வழங்க வேண்டியதில்லை. இந்த செயலியே பயனுள்ளதாக இருக்கும். ஆனால், தற்போது இந்த புதிய செயலி பீட்டா சோதனையில் உள்ளது.