வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மேற்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே வடமாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பருவமழையால் மிகவும் மோசமான பாதிப்புகளை வடமாநிலங்கள் எதிர்கொண்டுள்ளன. தமிழ்நாட்டிலும் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.