சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 17,000 ரன்களை கடந்த 6வது இந்திய அணி வீரர் என்ற புதிய சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
ரோஹித் ஷர்மா 2007ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். வலது கை ஆட்டக்காரரான ரோஹித் சர்மா, இந்திய அணியின் வெற்றிகளில் கணிசமாக பங்களித்துள்ளார். 49 டெஸ்ட், 241 ஒருநாள் மற்றும் 148 டி20 போட்டிகள் ஒட்டுமொத்தமாக 438 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் ஷர்மா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 ஆவது டெஸ்டின் 3ஆம் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 22 ரன்களை எடுத்தபோது, சர்வதேச போட்டிகளில் 17 ஆயிரம் ரன்களை கடந்து 6 வது இந்திய வீரர் என்ற புதிய சாதனை படைத்தார். இதன் அடிப்படையில் அவர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, தோனி வரிசையில் இணைந்துள்ளார்.
அதாவது, சர்வதேச போட்டிகளில், 664 ஆட்டங்களில் சச்சின் டெண்டுல்கர் – 34,357 ரனகள், விராட் கோலி – 494 போட்டிகளில் 25,047 ரன்கள், 504 போட்டிகளில் விளையாடிய ராகுல் டிராவிட் – 24,064 ரன்கள், சவுரவ் கங்குலி 421 ஆட்டங்களில் 18,433 ரன்கள் , மகேந்திர சிங் தோனி 535 போட்டிகளில் 17,092 ரன்கள் எடுத்துள்ளனர். இவர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள ரோகித் ஷர்மா, 438 போட்டிகளில் விளையாடியதன் மூலம் 17,014 ரன்களை எடுத்துள்ளார். மேலும், இவர்களில் கோலியும், ரோஹித் சர்மாவும் மட்டுமே தற்போது விளையாடி வருகிறார்கள். இன்னும் 165 ரன்கள் எடுத்தால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் கோலியை முந்துவதற்கு ரோகித் ஷர்மாவுக்கு வாய்ப்புள்ளது.
தற்போது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வருகிறது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.