உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் உள்ள கோதாவாளி பகுதியில் ஜிதேந்திரா என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவரின் ஒரு வயது மகன் அனுஜ் அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளான். அப்போது, அதே பகுதியில் வசித்துவரும் மந்திரவாதி அஜய் என்பவரிடம் தனது மகனை ஜிதேந்திரா அழைத்துச் சென்றுள்ளார். அதன்படி, அந்த மந்திரவாதியும் குழந்தைக்கு வைத்தியம் பார்க்க தொடங்கியுள்ளார். முதலில் ஒரு டப்பாவில் இருந்து திரவம் போன்ற ஒன்றை எடுத்து குழந்தைக்கு மந்திரவாதி கொடுத்துள்ளார். பின்னர், மாந்தரீக வைத்தியம் எனக் கூறி குழந்தையின் பற்களை உடைத்தும், குழந்தையை தரையில் வீசி அடித்தும் கொடூரமான செயல்களை அவர் செய்துள்ளார். இதனால் குழந்தை வலியால் அலறி துடித்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மந்திரவாதியிடம் இருந்து குழந்தையை மீட்டு அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், வலியால் துடித்த அந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து, மந்திரவாதி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் மந்திரவாதி அஜய்யை கைது செய்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தது. இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.