யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கடந்த 4ஆம் தேதி தேனியில் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதேசமயம் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சவுக்கு சங்கர் முதலில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், திருச்சி மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சவுக்கு சங்கர் மீது தொடர்ச்சியாக வழக்கு பதியப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், பெண் காவலர்களை இழிவாக பேசியதாக கூறப்படும் சவுக்கு சங்கருக்கு பெண் காவலர்களை வைத்தே தமிழ்நாடு போலீஸ் பாடம் புகட்ட முடிவு செய்தது.
அதன்படி, சவுக்கு சங்கரின் நண்பரும் ரெட் பிக்ஸ் யூடியூப் நிறுவனருமான பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் சவுக்கை பேட்டி எடுத்ததற்காக வழக்குப்பதிவு செய்து, அவரை டெல்லி சென்று திருச்சி மாவட்ட போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும்போது பெண் காவலர்களை வைத்தே அவரை நீதிமன்றத்திற்கு காவல்துறை அழைத்துச் சென்றது. நீதிமன்ற காவலில் பெலிக்சை வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அவரை சிறைக்கும் பெண் காவலர்களே அழைத்துச் சென்றனர்.
தற்போது அதே பாணியில், கோவை சிறையில் இருந்து இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சவுக்கு சங்கரை திருச்சி மாவட்ட பெண் காவலர்களே அழைத்துச் சென்றனர். போலீஸ் வேனில் கடைசி இருக்கையில் அமர வைக்கப்பட்ட சவுக்கு சங்கருக்கு இருபுறமும் பெண் காவலர்களே அமர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டுச் சென்றனர். பெண் காவலர்களை தவறாக பேசியதால், அவர்களின் பணியையும் உழைப்பையும் சவுக்கு சங்கருக்கு உணர்த்தும் வகையிலும், அவருக்கு பாடம் புகட்டும் விதத்திலும் இந்த ஏற்பாட்டை தமிழ்நாடு காவல்துறை செய்துள்ளது. பெண் காவலர்களை அலட்சியமாக பார்க்கும் மற்றவர்களும் பெண் காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு அளிக்கும் முக்கியத்துவம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதால், பெண் காவலர்களே இந்த வழக்கில் முழுக்க முழுக்க ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Read More : ஒருமுறை முதலீடு..!! லட்சங்களில் லாபம்..!! மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..?