திருவள்ளூர் மாவட்ட பகுதியில் திருத்தணி அருகாமையில், தமிழக ஆந்திர எல்லையான பொன்பாடி பகுதியில், சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி ஒன்று அமைந்துள்ளது.
நேற்று அந்த சோதனைச் சாவடி அருகே வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், பலத்த காயங்களுடன் இருந்த வாலிபரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.
காவல்துறையினரின் விசாரணையில், அந்த நபர் சென்னை பகுதியை சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்தது. மேலும், விசாரணையில் அவர் கூறியதாவது,” நேற்று இரவில் திருப்பதிக்கு சென்ற போது பேருந்து தமிழக ஆந்திர எல்லையில் உள்ள பொன்பாடி என்ற சோதனைச் சாவடி ஒன்றில் உணவு சாப்பிட நிறுத்தினர்.
அந்த சமயத்தில் , சிறுநீர் கழிப்பதற்காக அங்கிருந்து சிறிது தூரம் சென்றபோது அங்கு இருந்த மர்ம நபர் 3 பேர் என்னை கட்டையால் மற்றும் கையால் பலமாக தாக்கினர். மேலும் என் சட்டை பையில் வைத்திருந்த ரூபாய் 3800 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பித்து ஓடிவிட்டனர்” என கூறியுள்ளார்.
தற்போது அவருக்கு தலையில் ஏற்பட்ட பயங்கர தாக்குதலால் 8 தையல்கள் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து விவரங்களை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.