இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் பேமெண்ட்கள் அதிகரித்துள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் அதிகரிப்புடன், இணைய மோசடிகளும் சேர்ந்தே அதிகரித்துள்ளன. மோசடி என்றால் யாராவது உங்களை நேரில் வந்து தான் ஏமாற்ற வேண்டும் என்று நிலை மாறி, தற்போது சைபர் குற்றவாளிகள் ஆன்லைனிலேயே லட்சக்கணக்கில் பணத்தை திருடுகின்றனர்.. எனவே ஆன்லைனில் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நபர்கள், எப்போதும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு வங்கிகள் அறிவுறுத்தி வருகின்றன. மேலும் எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்யக்கூடாது, உங்கள் ஒன்-டைம் கடவுச்சொல்லை (OTP) ஒருபோதும் பகிரக்கூடாது என்று வங்கிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் சைபர் குற்றவாளிகள் பணத்தை திருட புதுப்புது வழிகளை கண்டுபிடித்து வருகின்றனர்.. அந்த வகையில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் தெரியாத நபரிடமிருந்து பெற்ற இணைப்பைக் கிளிக் செய்ததால் சுமார் 15 லட்சத்தை இழந்துள்ளார்.
என்ன நடந்தது..? மார்ச் 4 அன்று, கர்நாடக மாநிலம் மங்களூருவில் வசிக்கும் அந்த நபருக்கு தெரியாத எண்ணில் இருந்து பகுதி நேர வேலை தொடர்பாக எஸ்எம்எஸ் வந்துள்ளது.. வேலை வாய்ப்பைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, தனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிய நபரை தொடர்பு அவர் கொண்டுள்ளார்.. அப்போது, அந்த மோசடி நபர் டெலிகிராம் என்ற செய்தியிடல் செயலியைப் பதிவிறக்க சொல்லி உள்ளார். மேலும் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்குவதாகக் கூறி, அதிக பணத்தை முதலீடு செய்து மூன்று பணிகளை முடிக்க வேண்டும் என்று மோசடி நபர் கூறியுள்ளார்..
முதலில் ரூ.150 பணம் செலுத்த வேண்டும் என்று மோசடி நபர் கேட்டுள்ளார்.. பாதிக்கப்பட்ட நபர் ரூ.150 செலுத்திய உடன், அவருக்கு ரூ.2,800 திரும்ப கிடைத்துள்ளது.. . இதனால், அந்த நபர் மீது பாதிக்கப்பட்ட நபருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.. இதை தொடர்ந்து, தனது பெயரில் ஒரு கணக்கை உருவாக்கி அதன் மூலம் பணத்தை அனுப்புமாறு மோசடி நபர் ஒரு இணைப்பை அனுப்பி உள்ளார்.
எந்த சந்தேகமும் இல்லாமல், பாதிக்கப்பட்டவர் இணைப்பைக் கிளிக் செய்து, வழிமுறைகளைப் பின்பற்றி, மோசடி நபர் கேட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்துள்ளார். ஆனால் இணைப்பைக் கிளிக் செய்த பிறகு, மார்ச் 4 முதல் 8 வரை பல முறை பல்வேறு வங்கிக் கணக்குகளில் பாதிக்கப்பட்ட நபரின் வங்கிக்கணக்கில் இருந்து 15.34 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது..
இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ஆனால் இந்த சைபர் மோசடி செய்பவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடியை நடத்துவதால், பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும். எனவே அவர்களைக் கண்காணித்து பணத்தை மீட்டெடுக்க பல நாட்கள் ஆகலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..
ஆனால் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க, எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்யவோ அல்லது வங்கிச் சேவைகள் தொடர்பான நிதிப் பலன்கள் அல்லது உதவியை வழங்கும் எந்தச் செய்திகளையும் பெற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.