கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே கரியாலூர் பகுதியில் ஊரில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இது கல்வராயன் மலைப்பகுதியில் நடக்கும் குற்றச்சம்பவங்களை விசாரிக்கும் முக்கியமான காவல் நிலையமாகும். இங்கு, ஒரு சப்-இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என மொத்தம் 10 போலீசார் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள், அருகில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், அதற்கான பணம் சரிவர கொடுக்கவில்லை என தெரிகிறது. கடந்த 6 மாதங்களாக கடன் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், போலீசார் வைத்த டீக்கடை கடன் விவகாரம் தற்போது சிஎம் வரை சென்றுள்ளது. முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு புகாராக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கடைசியாக இந்த புகார், கரியாலூர் காவல் நிலையத்திற்கும் வந்துள்ளது. அதில், கடந்த 6 மாதங்களாக காவலர்கள் குடித்த டீக்கு ரூ.5 ஆயிரம் வரைக்கும் கடன் உள்ளது. இதை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கரியாலூர் காவலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிஎம் செல்லுக்கு டீக்கடை உரிமையாளர் தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டதா..? அல்லது காவல் நிலையத்தில் உள்ள யாராவது அனுப்பி வைத்தார்களா..? என்பது பற்றி விசாரணைக்கு பிறகே தெரியவரும்.