தமிழகத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 28-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நாளை முதல் ஆகஸ்டு 10-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த போட்டித்தொடரின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நாளை நடைபெறவுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் போஸ்டர், பேனர் என விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போஸ்டர்களில் பிரதமர் மோடி அவர்களின் புகைப்படமோ அல்லது பெயரோ இடம்பெறவில்லை, இதை பார்த்த பாரதிய ஜனதா கட்சியினர் கண்டித்து வந்தனர்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படம் தவிர்க்கப்பட்டுள்ள போட்டிக்கான அரசு விளம்பர பேனர்களில், சென்னை, அடையாறு உள்ளிட்ட இடங்களில், பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டுத் திறன் அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி பாரத பிரதமர் மோடியின் படத்தை ஓட்டினார். அதுமட்டுமல்லாமல் சென்னையில் எல்லா இடங்களிலும் உள்ள ஒலிம்பியாட் போஸ்டர்களிலும் மோடியின் படத்தை ஒட்ட வேண்டும் எனபாஜக நிர்வாகிகளுக்கு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி போஸ்டரில் பிரதமர் மோடியின் படம் ஒட்டப்பட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.