எந்த நேரத்திலும் இமயமலைப் பகுதியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் மட்டும் ரிக்டர் அளவுகோலில் 4க்கு மேல் பதிவான 6 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க் கிழமை மாலை வடக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் உணரப்பட்டது. மேலும், வடஇந்திய மாநிலங்களான டெல்லி-என்சிஆர், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டது.
இந்நிலையில், வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜியின் விஞ்ஞானி டாக்டர் அஜய் பால் “இமயமலைப் பகுதியில் எந்த நேரத்திலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது கடந்த செவ்வாய்கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் ஆழமானது என்றும், அதன் பிரதிபலிப்பு காரணமாக பல பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது என்றும் கூறினார். மேலும், இமயமலைப் பகுதி ஒரு நில அதிர்வு மண்டலம் (மிகக் கடுமையான தீவிர மண்டலம்) என்பதால், எந்த இடத்தில் நிலநடுக்கம் ஏற்படும் என்று குறிப்பது கடினமானது என்றும் தெரிவித்துள்ளார். நிலநடுக்கங்களின் போது உயிர்களைக் காப்பாற்றுவதில் விழிப்புணர்வு மற்றும் சிவில் இன்ஜினியரிங் கணிசமான பங்கு வகிக்கும் என்று கூறிய அவர், டெக்டோனிக் தகடுகள் ஆற்றலை வெளியிடும் போது இது நிகழ்கிறது ” எனவும் கூறியுள்ளார்.