முதல்வர் முக.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் வீடுகளில் ரெய்டு நடப்பது உறுதி என அதிமுக எம்பி தம்பிதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் பாராளுமன்ற தொகுதி நிதியில் இருந்து கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தை அதிமுக எம்பி தம்பிதுரை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுக செயற்குழு – பொதுக்குழு அதிகாரத்தின்படியே புதிய கூட்டணியை எடப்பாடி பழனிசாமி உருவாக்கியுள்ளார். அதிமுக – பாஜக உடனான கூட்டணி குறித்த அச்சத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏதேதோ பேசி வருகிறார்.
கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. அதேசமயம், வக்பு சட்ட எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு, மும்மொழிக் கொள்கைகளை எதிர்ப்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. திமுக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடன் 10 ஆண்டு காலம் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தது. இதன் விளைவாகவே மாபெரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்றது.
மேலும், டாஸ்மாக்கில் சுமார் 39 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா இதுகுறித்து பேசிய நிலையில், முதல்வர் ஸ்டாலின் பதில் கூற முன் வராமல் முழு பூசணிக்காயை மறைக்கப் பார்க்கிறார். எப்படி டெல்லியில் கெஜ்ரிவால் அவர்கள் சிறைக்கு சென்றாரோ அதே நிலை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கும் ஏற்படும்.
திமுகவில் பெண்களுக்கு எதிராகவும், ஆபாசமாக பேசக்கூடிய அமைச்சர்களையும் ஊழல் செய்யும் அமைச்சர்களையும் வைத்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். அதிமுகவினர் வீட்டில் ரெய்டு நடப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். எங்கே ரெய்டு நடக்கிறது என்று கூறுங்கள் பார்ப்போம். திமுக அமைச்சர் நேரு இல்லத்திலும், செந்தில் பாலாஜி இல்லத்திலும் தான் ரெய்டு நடக்கிறது. விரைவில் முதல்வர் முக.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோரது வீடுகளில் ரெய்டு நடப்பது உறுதி” என தெரிவித்தார்.
Read More : சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பது பாவத்திற்கு சமம்..!! – டெல்லி உயர் நீதிமன்றம்