எம்.பி. ஆ.ராசாவின் நீலகிரி சுற்றுப்பயணம் பாஜகவின் கடும் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், திமுக தலைமையும் ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காதது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆ.ராசாவின் பேச்சுக்கு பல்வேறு மாவட்டங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, அவர் எம்பியாக இருக்கும் நீலகிரி தொகுதியில் முழு அளவில் கடையடைப்பு நடத்தப்பட்டது. மேலும், ஆ.ராசாவுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது சொந்த தொகுதியான நீலகிரிக்கு செல்ல ஆ.ராசா திட்டமிட்டிருந்தார். அதற்காக கோவை விமான நிலையம் வந்து, அங்கிருந்து நீலகிரி செல்ல திட்டமிட்ட நிலையில், அவர் வரும்போது மிகப்பெரிய அளவில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க பாஜகவினர் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், ஆ.ராசாவின் நீலகிரி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் வெளிப்படையாக சொல்லப்படாத நிலையில், இந்த பயணம் ரத்தாகவில்லை, ஒத்திவைப்புதான் என திமுகவினர் கூறி வருகின்றனர்.