பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில், எலி சாப்பிட்டது போக மீதமிருந்த 11 கிலோ மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னை மாட்டான்குப்பம் பகுதியில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக ராஜகோபால் மற்றும் நாகேஸ்வரராவ் ஆகிய இருவரை மெரினா கடற்கரை போலீசார், கடந்த 2020 நவம்பர் மாதம் கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 21.9 கிலோ கஞ்சாவில், 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குற்றப்பத்திரிக்கையில் உள்ளபடி 21.9 கிலோ கஞ்சாவை தாக்கல் செய்வதற்கு பதிலாக குறைவான அளவில் கஞ்சாவை மட்டுமே சமர்ப்பித்ததால், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.;