தமிழ்நாட்டில் இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஏராளமான பொதுமக்கள் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், கூடுதல் கட்டண புகார் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 120 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். இந்த பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போதிலும், அரசுக்கும் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சங்கங்களே கட்டண நிர்ணயம் செய்துள்ளன. இதனை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் ஆணையரிடம் ஒப்புதல் பெற்று, அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கி வருகிறோம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் மாறன், “தமிழ்நாட்டில் இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும். மக்கள் பீதியடைய வேண்டாம். எங்கள் சங்கத்தில் 1,500 வாகனங்கள் உள்ளன. அவை அனைத்தும் இயங்கும். வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்திருக்கிறார்.