உலகின் மிக அமைதியான அறை என்று அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறை, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
அமைதி என்பது பலருக்கு மிகவும் பிடித்த விஷயமாகும். பல சமயங்களில் மக்கள் அமைதியையே விரும்புகின்றனர். எவரொருவர் வாழ்க்கையில் அமைதி உள்ளதோ அங்கே நிம்மதி இருக்கும். அந்த இடத்தில் வன்மம், கோபம், சண்டை, பொறாமை, போட்டி இருக்காது. நமக்கு அமைதியை பெறுவதற்கான வாய்ப்புக்கிடைத்தால், அதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அதனடிப்படையில், அமெரிக்க பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகம் வாஷிங்டனில் ரெட்மாண்டில் அமைந்துள்ளது. 2015ம் ஆண்டு இங்கு அனோகோயிக் என்ற அறை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த அறை உலகின் அமைதியான அறை என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. ஒரு தியான அறை போல மிகவும் அமைதியாக இருக்கும் இந்த அறையில், இதுவரை 45 நிமிடங்களுக்கு மேல் எந்த ஒரு மனிதரும் இருந்ததில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், இதயத்துடிப்பு நம்முடைய காதுகளுக்கு கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அறையில், வெளிப்புற சத்தம் நுழையாத வகையில், முற்றிலும் ஒலிப்புகாத பொருட்கள் கொண்டும், உள்பகுதி எவ்வித சத்தமும் இன்றி நிசப்தமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில், தலையை திருப்பி பார்க்கும் போது ஏற்படுகின்ற ஒலியை கூட நம்மால் உணர இயலும். வெங்காயம் போன்ற உள்கட்டமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அறை, ஆறடுக்கு கான்கிரீட் மற்றும் இரும்பு கொண்டு கட்டப்பட்டுள்ளது.
ஒலி அலைகள் வெளியே சென்று மீண்டும் அறைக்குள் எதிரொலிப்பதைத் தடுக்க, சுவற்றின் உட்புறம், தரையில், மேல்பகுதியில் பைபர்கிளாஸ் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறை கட்டி முடிப்பதற்கு 2 ஆண்டுகள் ஆனது. மைக்ரோபோன்கள், ஹெட்போன்கள், ஸ்பீக்கர்கள் போன்ற ஆடியோ உபகரணங்களும், தொடுதிரை மற்றும் தொடுதிரையில் இடம்பெற்ற கீபோர்டுகள், மவுஸ், பேன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் போது வெளிவரும் ஒலியின் அளவை பகுப்பாய்வு செய்ய மைக்ரோசாப்ட் இந்த அறையை பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது