அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்ட பள்ளி மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஆதனூர் கிராமம் கீழ தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் மாலதி. இவர், காட்டுநாயக்கன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வழக்கம்போல் வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலேயே மாணவி மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து, பதறிப்போன பெற்றோர், பள்ளி மனைவியை உடனடியாக எப்போதும் வென்றான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர். அப்போது, அங்கு மருத்துவர் இல்லை. 108 ஆம்புலன்ஸும் இல்லை. இதனால், மாணவியை மீண்டும் ஆட்டோவில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே மாணவி மாலதி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பள்ளி மாணவியின் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது, அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்டதன் காரணமாக, செரிமானம் ஆகாமல் மாணவி உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால், மாணவியின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.