பயிர் காப்பீடு தொடர்பான குறைகளை தீர்க்க, காப்பீட்டு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை விவசாயிகள் பெறும் வகையில் ‘சாரதி’ எனும் இணையதள பக்கத்தை மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தொடங்கிவைத்தார்.
இந்தியாவின் விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்காக வடிவமைக்கப்பட்ட பி.எம்.எப்.பி.ஒய்., எனப்படும் ‘பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம்’ மற்றும் அது சார்ந்த பிற காப்பீட்டு திட்டங்களின் விரிவான தொகுப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, ‘சாரதி’ என்ற இணையதள பக்கத்தை அமைச்சர் அர்ஜுன் முண்டா துவக்கி வைத்தார். அத்துடன் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் குறை தீர்ப்பு நடைமுறைகளை வலுப்படுத்தவும், விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கவும், ‘க்ரிஷி ரக்ஷக்’ என்ற ஒரு இணையதளத்தையும், 14447 என்ற உதவி மைய எண்ணையும் அவர் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் முண்டா பேசியதாவது: இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான முயற்சியில், வேளாண் அமைச்சகம் ஒன்றிணைந்து செயலாற்றி வருகிறது. இதன் ஒருபகுதியாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வேளாண் துறையில் பயன்படுத்தி முன்னேற்றம் கண்டு வருகிறோம். இத்திட்டங்கள் விவசாயிகளுக்கு நிச்சயம் பலனளிக்கும் என்று அமைச்சர் முண்டா கூறினார்.