Andhra: ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
கர்நாடகாவில் 90 கி.மீ., ஆந்திராவில் 45 கி.மீ, தமிழகத்தில் 225 கி.மீ. பயணிக்கிறது பாலாறு. ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே அம்மாநில அரசு 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கு வரும் தண்ணீர் அங்குள்ள தடுப்பணைகளில் சேமிக்கப்படுவதால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காததால் பாலாற்று நீரை நம்பியுள்ள விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் 127 கி.மீ தொலைவுக்கு பாலாறு பயணிக்கிறது. இந்த பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி மழைக்காலத்தில் வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும் என வட மாவட்ட விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே ஆந்திரா 22 தடுப்பணைகளை கட்டிய நிலையில் மேலும் ஒரு தடுப்பணைக்கு அடிக்கல் நாட்டுகிறார் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
1992 பன்மாநில நதிநீர் ஒப்பந்தத்தை ஆந்திர அரசு மீண்டும் மீறியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல, 2 வழக்குகள் ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டது. இது தவிர பாமக சார்பிலும் ஒரு வழக்கு ஆந்திர அரசுக்கு எதிராக தொடரப்பட்டு அந்த வழக்குகள் தற்போது நடந்து வருகிறது.
இது தொடர்பான வழக்கு மார்ச் மாதம் 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் இந்த வழக்குகள் முடிந்துவிட்டதாக பொய்யான ஒரு தகவலை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்து, ஆந்திர அரசு புதிதாக மேலும் ஒரு தடுப்பணை கட்ட ஏற்பாடுகள் செய்து வருவது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவது மட்டுமின்றி தமிழக விவசாயிகளை ஒட்டுமொத்தமாக வஞ்சிக்கும் செயலாக உள்ளது.